அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அஜித் திவாரியின் ஜாமின் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் ரூ 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில், கடந்த டிசம்பர் 1ம் தேதி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் தற்போது அங்கித் திவாரி அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் அங்கித் திவாரி சார்பில் ஜாமின் கேட்டு இரண்டாவது முறையாக கடந்த 31ஆம் தேதியன்று திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து மனு மீதான விசாரணை கடந்த ஒன்றாம் தேதி அன்று நடைபெற்றது. பின்னர் 5ம் தேதியான நேற்று மனுவை ஒத்தி வைத்தார் நீதிபதி மோகனா. பின்னர் நேற்று முழுமையாக  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா மனு மீதான உத்தரவு இன்று வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமின் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி மோகனா உத்தரவிட்டுள்ளார்.