தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அமைச்சர் ராஜ்மோகனுக்குத் திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் தணிக்கைத் துறை ஒதுக்கப்பட்டதை நடிகர் விஷால் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு இயக்குநர் பேரரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சினிமா அனுபவம் இல்லாத ராஜ்மோகனுக்கு ஏன் இந்தத் துறை வழங்கப்பட்டது என்ற விஷாலின் எக்ஸ் (X) பக்கப் பதிவிற்குப் பதிலடி கொடுத்துள்ள பேரரசு, கடந்த திமுக ஆட்சியில் செய்தி மற்றும் சினிமாத் துறை அமைச்சராக இருந்த சாமிநாதனுக்கு என்ன சினிமா அனுபவம் இருந்தது என்றும், அவர் எத்தனை படங்களை இயக்கியுள்ளார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கடந்த ஆட்சியில் தியேட்டர்களில் படங்களை வெளியிடுவதில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருந்தபோதும், க்யூப் கட்டணம் செலுத்த முடியாமல் சிறு படங்கள் தவித்தபோதும் வாய் திறக்காத விஷால், இப்போது மட்டும் ஏன் குறை சொல்கிறார் என்றும் அவர் சாடியுள்ளார்.
ராஜ்மோகன் ஒரு பத்திரிகையாளராகப் பல சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்தவர் என்பதால், திரைத்துறையின் பிரச்சனைகள் அவருக்கு நன்றாகவே தெரியும் என்றும், எதுவுமே தெரியாத ஒருவர் அமைச்சராவதை விட ராஜ்மோகன் எவ்வளவோ மேல் என்றும் பேரரசு குறிப்பிட்டுள்ளார்.
அனுபவம் இல்லாதவர்கள் பதவிக்கு வரக்கூடாது என்று பார்த்தால், எம்.எல்.ஏ அல்லது எம்.பி-யாக இல்லாத விஜய்யை மக்கள் நம்பி முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவேளை ராஜ்மோகன் சரியாகச் செயல்படத் தவறினாலும், முதலமைச்சர் விஜய் சினிமா துறையிலிருந்து வந்தவர் என்பதால் அவர் திரைத்துறைக்குச் சரியானதைச் செய்வார் என்று இயக்குநர் பேரரசு தனது பேட்டியில் அழுத்தமாகப் பேசியுள்ளார்.
