தென்னிந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற நடிகரும், இயக்குநருமான பிரகாஷ் ராஜ் இன்று (மார்ச் 26) தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெங்களூருவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது அசாத்திய நடிப்பால் பல தேசிய விருதுகளைக் குவித்து, திரையுலகில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் கடந்த 1994-ல் லலிதா குமாரி என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு மேக்னா, பூஜா என்ற இரு மகள்களும், சித்து என்ற மகனும் இருந்தனர். ஆனால், 2004-ஆம் ஆண்டு இவரது 5 வயது மகன் சித்து எதிர்பாராத விதமாக உயிரிழந்தது பிரகாஷ் ராஜின் வாழ்வையே புரட்டிப் போட்டது. இது குறித்து அவர் கூறுகையில்,

“எனது மகனின் உடலை எனது சொந்த விவசாய நிலத்திலேயே அடக்கம் செய்தேன். அவனை நினைக்கும் போதெல்லாம் அங்கே போய் அமைதியாக அமர்ந்து கொள்வேன். அங்கு செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு தந்தையாக நான் எவ்வளவு உதவியற்றவன் என்பதை உணர்கிறேன்,” என்று உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

மனைவி லலிதாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக 2009-ல் விவாகரத்து பெற்ற பிரகாஷ் ராஜ், பின்னர் பாலிவுட் நடன இயக்குநர் பொன்னி வர்மாவைச் சந்தித்தார். பொன்னி வர்மா, பிரகாஷ் ராஜை விட 12 வயது இளையவர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். “நான் பொன்னியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியபோது, எனது மகள்களிடம் அனுமதி கேட்டேன். அவர்களோ மகிழ்ச்சியுடன், ‘அப்பா, நீங்கள் நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று கூறி எனக்கு ஆதரவளித்தனர்,” என்று தனது இரண்டாவது திருமணத்தின் பின்னணியைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 60 வயதை எட்டும் இந்த வேளையிலும், தனது அரசியல் கருத்துக்கள் மற்றும் மாறுபட்ட நடிப்புத் திறன் மூலம் இந்தியத் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக பிரகாஷ் ராஜ் ஜொலித்து வருகிறார். அவருக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.