குருகிராம் அருகே குடும்பத் தகராறு காரணமாக நசீம் என்ற நபர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நசீம், என்பவர் கடந்த சில மாதங்களாக குருகிராமில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தனது 35 வயது மனைவி மற்றும் 14, 12, 10, 8 வயதுடைய நான்கு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, நசீம் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தனது குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்துக் கொன்றாரா அல்லது வேறு ஏதேனும் ஆயுதத்தைப் பயன்படுத்தினாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் வாடகைக்கு வசித்து வந்த இந்த குடும்பத்திற்குள் என்ன பிரச்சனை என்பது அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவில்லை.
உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்த பின்னரே உயிரிழப்பிற்கான சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு முழு குடும்பமே இப்படி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
