தன் பிள்ளைகளின் ஆசைகளுக்காக எதையும் மறுக்காமல் உழைக்கும் தந்தையர்களின் தியாகத்திற்கு ஈடாக இந்த உலகில் எதுவுமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பாசக்கார தந்தைக்கு, ஐஐடி வாரணாசியில் படிக்கும் அபிநந்தன் கெய்க்வாட் என்ற மாணவர் கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2021-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றபோது தான் கேட்டவுடன் தந்தை மொபைல் வாங்கி தந்ததையும், பின்னர் கல்லூரி முதலாம் ஆண்டில் ஆசையாக கேட்ட ‘ஐபோன் 14’ மாடலையும் தன் தந்தை கஷ்டப்பட்டு வாங்கி தந்ததை அந்த மாணவர் நினைவுகூர்ந்துள்ளார்.
தனக்காக எதையும் ‘இல்லை’ என்று சொல்லாத தந்தைக்கு, தற்போது ஒன்பிளஸ் (OnePlus) ரக புதிய மொபைல் போன் ஒன்றை சர்ப்ரைஸ் பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.
View this post on Instagram
தான் ஆசையாய் கொடுத்த பையை தந்தை பிரித்துப் பார்த்துவிட்டு, உள்ளே புதிய போன் இருப்பதை கண்டு நெகிழ்ச்சியுடன் சிரித்தபடி மகனுக்கு கை குலுக்கி நன்றி கூறும் காட்சிகள் பார்ப்போரின் கண்களை குளமாக்கியுள்ளது.
“எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த தந்தை, இந்த உலகின் மிகச்சிறந்த விஷயங்களுக்கு தகுதியானவர்” என அந்த மாணவர் பதிவிட்டுள்ள இந்த பாசப் போராட்டம், பலரையும் தங்களின் பெற்றோரின் தியாகங்களை எண்ணி உருக வைத்துள்ளது.
