மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தாம்தா கிராமத்தில், அரசின் புதிய மதுபானக் கொள்கைக்கு எதிராக பெண்கள் மற்றும் குழந்தைகள் கையில் தடிகளுடனும் கற்களுடனும் திரண்டு வந்து புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடையை அதிரடியாக அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்புப் பகுதி, பள்ளி மற்றும் பெண்கள் நடமாடும் முக்கியப் பாதையில் இந்த மதுக்கடை திறக்கப்பட்டதால், குடிகாரர்களால் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், பெண்களிடம் அத்துமீறல்கள் நடப்பதாகவும் கூறி கிராம மக்கள் ஏற்கனவே அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
#WATCH | Group Of Women, Children Vandalise And Loot Liquor Shop In Jabalpur To Protest Its Opening #MPNews #MadhyaPradesh pic.twitter.com/UomyAnwD27
— Free Press Madhya Pradesh (@FreePressMP) May 17, 2026
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள், ஞாயிற்றுக்கிழமை அன்று திரண்டு வந்து கடையின் கவுண்ட்டர்கள் மற்றும் அலமாரிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கல்லா பெட்டியில் இருந்த பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாகக் கடையின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடையின் முன்னால் குழந்தைகள் நடனமாடுவது போலத் தொடங்கி, சில நிமிடங்களில் வன்முறையாக மாறிய இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டம் மதுபானக் கொள்கைக்கு எதிராக மக்கள் மத்தியில் நிலவும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
