இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங், இளைய வீரர் அபிஷேக் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையை பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் (PCA) முற்றிலும் அழிக்க முயன்றது என்ற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தி வருகின்றன.
“அபிஷேக் ஒரு பவுலர்தான், அவன் பேட் அடிக்க மாட்டான்” என்று PCA மற்றும் அங்குள்ள பயிற்சியாளர்கள் தவறான தகவல் வழங்கினார்கள் என யோக்ராஜ் சிங் கூறியுள்ளார். ஆனால் யுவராஜ் சிங் இந்த தகவலை நம்பாமல், அபிஷேக்கின் புள்ளிவிவரங்களை நேரடியாகக் கேட்டுள்ளார். அப்போது அபிஷேக் ஷர்மா ஏற்கனவே 2400 ரன்கள் குவித்திருந்தார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. “ஏன் தவறான தகவலை கூறினீர்கள்?” என யுவி கேட்டதும், உண்மையான திறமை பதுங்கவைக்கப்பட்டதை அவர் புரிந்துகொண்டாராம்.
“நான் யுவியிடம் கேட்டேன் – இவனுடைய முழு புள்ளிவிவரங்கள் என்னன்னு. யுவி அதையும் எனக்கு அனுப்பி, ‘பாபா, பாருங்க இவனை. இவனுக்கு வாய்ப்பு தரணும்’னு சொன்னான். இது தான் இந்தியாவில் நடக்குறது… பொறாமையால் திறமைகளை அழிக்கிறாங்க. நம்ம யுவி இருந்ததால்தான் அவன் வாழ்க்கை மாறிச்சு,” என்கிறார் யோக்ராஜ்.
“ஒரு வைரம் இன்னொரு வைரத்திடம் போனால்தான் கோஹினூரா ஆகும். அதுதான் அபிஷேக் ஷர்மாவோட கதையும்,” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ள யோக்ராஜ் சிங், இந்த வழக்கத்தில் யுவராஜ் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். யுவி, அபிஷேக்கை வழிநடத்தி, அவரது திறமையை வெளிப்படுத்தி, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை நட்சத்திரமாக மாற்றியுள்ளார்.
IPL 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்காக விளையாடும் அபிஷேக் ஷர்மா, இதுவரை 7 போட்டிகளில் 232 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அவரின் செயல்திறன் உயர்ந்த இடத்தில் பரிசீலிக்கப்படுகிறது. இருப்பினும் SRH அணி, தற்போது 7 போட்டிகளில் 5 தோல்விகளுடன் உள்ளது. மேலும் SRH அடுத்தமாக ஏப்ரல் 23-ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ஆடவுள்ளது.
