விருதுநகர் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்துடனான தனது நட்பு மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார். அவர் பேசியதாவது, திருச்சுழி தொகுதி வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு குறித்துப் பேசிய முதல்வர், “தலைவர் கலைஞரின் அன்புத்தூணாக விளங்கியவர் தங்கம் தென்னரசு. ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக வென்றதோடு, தமிழகத்தின் நிதித்துறையைத் தலைநிமிரச் செய்தவர்.

இவரை எதிர்த்துப் போட்டியிடவே எதிர்க்கட்சியினர் தயங்குகிறார்கள் என்ற செய்திகள் வருகின்றன. அத்தகைய சாதனையாளருக்கு ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜயபிரபாகரன் குறித்துப் பேசியபோது முதல்வர் ஸ்டாலின் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும் “என் ஆருயிர் நண்பர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் சகோதரி பிரேமலதா ஆகியோரின் மகன் விஜயபிரபாகரன் இன்று களம் காண்கிறார். ‘மக்கள் ஆணையிட்டால்’ திரைப்படத்தில் விஜயகாந்த் தேர்தலில் நிற்பது போன்ற காட்சியில், அவருக்கு ஆதரவாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அன்று திரையில் விஜயகாந்துக்காக வாக்கு கேட்ட நான், இன்று நேரில் அவரது மகனுக்காக வாக்கு கேட்க வந்திருக்கிறேன். அவருக்கு ‘முரசு’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று நெகிழ்ந்து பேசினார்.