கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை சேர்த்திருப்பதை ராகுல் காந்தி நிரூபித்து உள்ளார்.
ஆனால் ஆளும் அரசு இதுகுறித்து மவுனம் சாதித்து, பொறுப்பில்லாத பதில்களை கூறி வருகிறது. அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்ற பொதுத்துறை அமைப்புகள் அரசியல் சார்புடன் செயல்படுவது ஜனநாயகத்திற்கு பெரிய அபாயம்.
இதை நாட்டின் மக்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படை வாக்குரிமையே போலியாக பயன்படுத்தி ஆட்சிக்கு வருவது மிகவும் மோசமான காலக்கட்டம். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
பின்னர் நாகர்கோவிலில் அளித்த பேட்டியில், பா.ம.க. பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் கூறிய “2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சி அகற்றப்படும்” என்ற கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “அன்புமணியின் ஆணிவேரே உடைந்து விட்டது; சின்ன காற்று அடித்தால்கூட விழுந்துவிடும். நான் சொல்கிறேன், அடுத்த தேர்தலுக்குப் பிறகு பா.ம.க. என்றே இருக்காது” என்று காட்டமாக விமர்சித்தார்.
