
தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதுக்கோட்டை மாவட்டம் அரசு பள்ளியில் மாணவிகள் ஏழு பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவிகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.
பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஆலோசனை குழுக்கள் அமைக்க சொல்லி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் எந்த பள்ளிகளிலும் இந்த குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதை தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவது தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1998 என்ற எண்ணுக்கு அழைத்தால் மட்டுமே தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி செல்லக்கூடிய நம் பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இத்தனை குற்றங்களுக்குப் பிறகும் மாணவிகளை பாதுகாப்பதில் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சராக தொடர தகுதியே கிடையாது, தார்மீக உரிமையோ இல்லை. உடனடியாக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். தமிழக முதல்வர் உடனடியாக பள்ளிக்கல்வித்துறைக்கு திறமையான மற்றும் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட ஒருவரை அமைச்சராக நியமித்து பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த அறிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது.