சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்குவதோடு பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. உமர் என்ற நபர் அவசரமாக ஓரிடத்திற்குச் செல்ல ‘ராபிடோ’ புக் செய்தபோது, திரையில் மின்னிய ‘சந்தன்’ என்ற பெயரைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அது தனது பள்ளிப்பருவத்தில் வகுப்பில் முதலிடம் பிடித்த அதே சந்தனாக இருக்குமோ என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. அவர் சந்தேகப்பட்டபடியே, பைக் ஓட்டி வந்த அந்த நபர் உமரின் பழைய வகுப்புத் தோழன் தான் என்பது உறுதியானது. ஒரு காலத்தில் படிப்பில் டாப்பராக இருந்த தனது நண்பன், இன்று பைக் டாக்ஸி ஓட்டுவதைக் கண்டு உமர் நிலைகுலைந்து போனார்.

​பயணத்தின் போது, “வாழ்க்கை எப்படி இப்படி மாறியது?” என்று உமர் கேட்டதற்கு, அந்த நண்பன் அளித்த பதில் பலருக்குப் பாடமாக அமைந்துள்ளது. “வாழ்க்கை நாம் நினைத்தபடி நடப்பதில்லை நண்பா” என்று நிதானமாகக் கூறிய சந்தன், தனது நண்பனிடம் பணம் வாங்கவும் மறுத்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் இரண்டு விதமான கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரு சிறந்த மாணவனுக்கு ஏற்பட்ட இந்த நிலையை எண்ணி சிலர் வருத்தப்பட்டாலும், “உழைப்பில் உயர்வு தாழ்வு இல்லை” என்று பலர் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே சமயம், இது லைக்ஸ்களுக்காக எடுக்கப்பட்ட ‘ஸ்கிரிப்ட்’ செய்யப்பட்ட வீடியோவாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.