ஐதராபாத்தின் சந்தோஷ் நகர் பகுதியில் மேம்பாலம் கட்டுமானப் பணியின் போது அரங்கேறி வரும் அலட்சியமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வாகனங்கள் சீறிப்பாயும் சாலைக்கு நேர் மேலே, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தொழிலாளர்கள் ராட்சத இரும்பு கம்பிகளை தோளில் சுமந்து செல்வது பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.

தலைக்கவசம், பாதுகாப்பு கயிறுகள் அல்லது வலைகள் என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல், அந்தரத்தில் தொழிலாளர்கள் நடப்பதும், அவர்கள் கையில் இருக்கும் பாரமான கம்பிகள் ஒரு நொடி கைதவறினால் கூட கீழே செல்லும் வாகன ஓட்டிகளின் உயிர் பறிபோகும் அபாயம் இருப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது குமுறல்களைக் கொட்டி வருகின்றனர்.

“மக்களின் உயிர் வெறும் 4 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையோடு முடிந்துவிடுமா?” என்றும், “விபத்து நடக்கும் வரை அதிகாரிகள் காத்திருக்கப் போகிறார்களா?” என்றும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் மும்பையில் இதேபோல கட்டுமானப் பணியின் போது இரும்பு கம்பி விழுந்து இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் மக்கள், உடனடியாக ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.