சீனாவில் சுரங்க ரயில் (சப்வே) ஒன்றில் நடந்த ஒரு சம்பவம், அங்குள்ள இணையப் பயனாளிகளின் பாராட்டுகளை அள்ளி வருகிறது. ரயில் பெட்டியில் பயணம் செய்த ஒரு பெண், தவறுதலாகத் தான் வைத்திருந்த பபிள் டீ-யைக் கீழே கொட்டிவிட்டார். கையில் இருந்த டிஷ்யூ பேப்பர்கள் தீர்ந்த பிறகும் அந்தப் பிசுபிசுப்பான தேநீரை முழுவதுமாகச் சுத்தம் செய்ய முடியவில்லை.
அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக அந்தப் பெண், தான் அணிந்திருந்த ஸ்கார்ஃப் துணியை எடுத்துப் பயன்படுத்திக் கீழே கொட்டிய தேநீரை முழுவதும் துடைத்துச் சுத்தம் செய்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் டிசம்பர் 4ஆம் தேதி நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தப் பெண்ணின் பொறுப்பான செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். “அனைவரும் இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று ஒரு பயனர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இன்னொருவர், “எனது சீன முதலாளியும் தண்ணீர் கீழே கொட்டியபோது, தானே துடைத்துச் சுத்தம் செய்தார்” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இதனிடையே, இந்த வீடியோ வைரலான பிறகு, அந்தப் பெண்ணின் நல்ல செயலைப் பாராட்டி, சுரங்க ரயில் நிறுவனம் அவருக்குப் புதிய ஸ்கார்ஃப் ஒன்றையும், வேறு சில பரிசுகளையும் அளித்துக் கௌரவித்துள்ளது.
