தமிழகத்தில் முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாக இருக்கும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வட மாநிலங்களில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று ராமர் பாதம், ராம தீர்த்தம், கோதண்ட ராமர் கோவில் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட பல சுற்றுலா இடங்களை பார்த்து ரசிக்கின்றனர். இந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வாடகைக்கு ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சென்று வரும் நிலையில் அரசு சார்பாக சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தற்போது ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் இன்று முதல் குறைந்த கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்து சிறப்பு பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்படும். இதில் பயணி ஒருவருக்கு 80 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பேருந்தில் 42 பேர் வரை பயணம் செய்யலாம். பேருந்தில் ஏறும் பயணிகள் ஒரு இடத்தில் இறங்கி விட்டால் மீண்டும் இதே சிறப்பு பேருந்து வந்தால் அந்த டிக்கெட்டை காண்பித்து எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். முதல் கட்டமாக இந்த பேருந்துகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே இயக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.