அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க டெல்லி சென்றார். அதேசமயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளார் எனும் தகவலும் வெளியானது.

அந்த வகையில், இன்று இரவு 8 மணி அளவில் அமித்ஷாவின் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்தார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் சென்றிருந்தாலும், அமித்ஷா மற்றும் பழனிசாமி இருவரும் தனியாக சுமார் 40 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பில், என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிருப்தி தலைவர்களை சந்திக்க வேண்டாம், திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்.டி.ஏ. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் எடப்பாடி பழனிசாமியால் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல, தியாகதீபம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.