தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.  விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் ரவிக்குமார், அதிமுக சார்பில் பாக்யராஜ், பாஜக கூட்டணி பாமக சார்பில் முரளி சங்கரும் போட்டியிடுகிறார்கள் .இதில் அதிமுக வேட்பாளர் பாக்யராஜுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் அதிமுக முக்கிய தலைவர்களில்  ஒருவருமான  சிவி சண்முகம் கடந்த 20 நாட்களாக தீவிர பிரச்சாரம்  மேற்கொண்டு வந்தனர்.  இந்நிலையில் சிவி சண்முகம் பெயரில்  எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதியதாக கடிதம் ஒன்று பரவியது.

அதில் விழுப்புரம் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக பாக்கியராஜ் அறிவிக்கப்பட்டதில் தனக்கு துணியும் விருப்பமில்லை என்றும் தன்னிடம் ஆலோசனை மேற்கொள்ளாமல் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எனவும் சி.வி சண்முகம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த போலியான கடிதம் வாக்காளர்களை திசை திருப்பவே வெளியிடப்பட்டதாக அதிமுக வழக்கறிஞர் தமிழரசன், ராதிகா ஆகியோர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர் . மேலும் போலியான அறிக்கை வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் புகார் வைத்துள்ளனர். இது விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.