கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் (30) என்பவருக்கும், ஹுலிகட்டே கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமணத்தை சரஸ்வதியின் மாமாவான ருத்ரேஷ் (36) முன்னின்று நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி 23-ஆம் தேதி கோவிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி, தனது காதலன் குமாருடன் ஓடிச் சென்றார். இதனால் மனமுடைந்த கணவர் ஹரிஷ், தனது மரணத்திற்கு சரஸ்வதி மற்றும் அவரது காதலனே காரணம் எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அந்த மரணக் குறிப்பில், தனது மனைவி தன் மீது பொய்ப் புகார் அளித்ததாகவும், அவளது உறவினர்கள் தன்னை மிரட்டியதாகவும் ஹரிஷ் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் செய்தி அறிந்ததும், இத்திருமணத்தை ஏற்பாடு செய்த குற்ற உணர்ச்சியில் இருந்த சரஸ்வதியின் மாமா ருத்ரேஷ், கடந்த செவ்வாய்க்கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ஹரிஷின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக சரஸ்வதி மற்றும் அவரது காதலன் குமார் ஆகிய இருவரையும் தாவணகெரே போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே சரஸ்வதிக்கும் குமாருக்கும் தொடர்பு இருந்ததும், அதனை மறைத்துத் திருமணம் நடந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.