தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் எனப் பெரிய பட்டாளமே ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
மாற்றுக்கட்சியினர் தவெக-வில் இணைந்த பிறகு இதுவரை அவர்களை நேரில் சந்திக்காமல் இருந்த முதல்-அமைச்சர் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக இன்று பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மாஸாக வருகை தந்தார். புதிதாகக் கட்சியில் இணைந்த நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்குவது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பரபரப்பான சூழலில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் மற்றும் அண்மையில் புதிய கட்சி தொடங்கியிருந்த பெங்களூரு புகழேந்தி ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாகத் தவெக-வில் இணைந்து அறிவாலயத்திற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் செம ஷாக் கொடுத்தனர். தவெக-வில் இணைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, “தவெக ஆபீஸ்க்குள்ள போனதும் எனக்கு அதிமுக ஆபீஸ்க்குள்ள போன மாதிரியே இருந்துச்சு, ஏன்னா அங்க 95% நம்ம அதிமுக காரங்கதான் இருக்காங்க!” என்று அதிர வைத்தார்.
மேலும் எடப்பாடி பழனிசாமியை மிகக் கொடூரமாக விமர்சித்த அவர், “ரஷ்யாவில் புதின் தொடர்ந்து அதிபராக இருக்கிறார். ஆனால், ஒரு கட்சி வலிமையாக இருந்தால் அதை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தால் போதும்; அந்த கட்சியை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிடுவார்” என்று சாடியுள்ளார். தவெக-வின் இந்த அசுர வேக சேர்க்கையும், புகழேந்தியின் இந்த வெடிப் பேச்சும் ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் சும்மா உலுக்கி எடுத்துள்ளது.
