அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த பிறகு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வளர்ந்த காலத்தில் இந்தியாவைப் பற்றி எதிர்மறையான விஷயங்களையே அதிகம் கேள்விப்பட்டிருந்ததால், இந்தியாவுக்குப் போக வேண்டும் என்று தனது தாய் சொன்னபோது, அவர் பயத்தில் கதறி அழுததாகத் தெரிவித்துள்ளார். இந்திய கலாச்சாரம் மற்றும் மக்கள் மீதான பயத்துடன் வந்த அவருக்கு, இங்குள்ள உறவினர்கள் காட்டிய அன்பும், அண்டை வீட்டாரின் அக்கறையும் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
Moving to India wasn’t what I expected
byu/Successful-Okra6409 inindia
”இந்தியாவில் கலாச்சார அதிர்ச்சி என்பது உண்மைதான், அதேபோல இங்கு எல்லாமே Perfect என்று நான் சொல்லமாட்டேன். குறிப்பாகத் தெரியாத ‘ஆண்ட்டி’கள் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கும்போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால், நேரில் வந்து பார்க்காமலேயே இந்தியாவை மக்கள் ஏன் இவ்வளவு வெறுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தனது தாயார் நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தியாவில் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்பது தனக்குத் திருப்தி அளிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த பல அமெரிக்க வாழ் இந்தியர்கள், தாங்கள் இந்தியாவிற்கு வந்தபோது இதேபோன்ற அனுபவங்களை எதிர்கொண்டதாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
