இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களை உணர்ச்சிகரமாக்கியுள்ளது. இந்தக் காணொளியில், கூகுளின் யூடியூப் அலுவலகத்தில் புரோடக்ட் மேனேஜராகப் பணியாற்றும் இந்திய இளைஞர் அபிஜய் வுயூரு, தனது அம்மாவை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கூகுள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சுற்றி காட்டுகிறார். இது அவரது அம்மாவின் முதல் பார்வை என்பதால், அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளை, தனது வொர்க்ஸ்டேஷனை, காஃபிட்டரியாவில் உணவு உண்ணும் காட்சிகளை பதிவு செய்துள்ளார்.
அம்மாவின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியும், அபிஜய்யின் கண்களில் ஒளிரும் பெருமையும் அனைவரையும் தொடுகிறது. அபிஜய் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்த நாளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இன்று என் அம்மாவுக்கு என் அலுவலகத்தைக் காட்டினேன். கூகுளின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்றேன். அவர் எனக்கு செய்தது விளக்க முடியாதது. ஒவ்வொரு கடின சமயத்திலும் என்னை ஊக்குவித்தவர்.
இன்று நான் இப்படி இருப்பது அவரது தியாகங்களால் தான். இந்த நாள், இந்த வெற்றி, எல்லாம் அம்மாவுக்காகவே” என்று உணர்ச்சிகரமாகக் கூறியுள்ளார். இந்தக் காணொளி, தாய்மகன் பாசத்தை வலியுறுத்தி, இந்திய கனவான அமெரிக்காவில் வெற்றி பெறும் போது பெற்றோருடன் பகிரும் மகிழ்ச்சியை நினைவூட்டி, ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.
