சண்டையின்போது அடுத்தவரின் ஆண் உறுப்பை பிடித்து கசக்குவது கொலை முயற்சியாகாது என கர்நாடக உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
சிக்மகளூரு மாவட்டம் கடூர் அடுத்த முகலிகட்டே பகுதியில் வசித்து வருபவர் பரமேஷ்வரப்பா. அதே பகுதியை சேர்ந்தவர் தான் ஓம்காரப்பா. சென்ற 2010-ம் வருடம் நரசிம்ம சுவாமி கோவில் திருவிழாவை ஓம்காரப்பா தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த பரமேஷ்வரப்பா அவருடன் சண்டையிட்டுள்ளார்.
அதோடு சண்டையின்போது, ஓம்காரப்பாவின் ஆண் உறுப்பை பிடித்து பரமேஷ்வரப்பா கடுமையாக பிடித்து கசக்கியுள்ளார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஓம்காரப்பா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரமேஷ்வரப்பாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைகள் நிறைவு பெற்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதாவது, சண்டையின் போது அடுத்தவரின் ஆண் உறுப்பில் கசக்குவது கொலை முயற்சியாகாது. அதோடு குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு நோக்கத்துடன் கொலை செய்ய முயற்சித்தார் என கூற முடியாது. இதனால் அப்படி ஏற்படும் காயத்தை இந்திய தண்டனைச் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் அந்தரங்க உறுப்புகளை தாக்குவதன் வாயிலாக ஏற்படும் காயம் என கூறலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கொலை முயற்சிக்காக 7 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தண்டனையை 3 வருடங்களாக குறைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
