நாம் அன்றாட வாழ்க்கையில் யாராவது பொய் அழுகை அழுதால், “முதலைக் கண்ணீர் வடிக்காதே” என்று கூறுவதைக் கேட்டிருப்போம். முதலைகள் தங்களது இரையை வேட்டையாடி சாப்பிடும் போது, அதன் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டுதான் நம் முன்னோர்கள் இப்படியொரு பழமொழியை உருவாக்கினர். ஆனால், முதலைகள் நிஜமாகவே பாசத்தாலோ அல்லது பரிதாபப்பட்டு அழுகிறதா என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் தற்போது ஒரு அதிரடியான அறிவியல் விளக்கத்தை அளித்துள்ளனர்.
பொதுவாக, முதலைகள் தங்களது இரையைச் சாப்பிடும் போது கண்களில் இருந்து தண்ணீர் வருவது உண்மைதான். ஆனால், மக்கள் நினைப்பது போல அது எந்த ஒரு சோகத்தினாலோ அல்லது பாசாங்கு செய்வதற்காகவோ நடப்பது கிடையாது என விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதற்குப் பின்னால் முற்றிலும் உடலியல் ரீதியான ஒரு அறிவியல் காரணம் ஒளிந்துள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, முதலைகள் தங்களது பெரிய மற்றும் பலத்த இரையை வாயில் கவ்வி, கடினமான தாடைகளால் மென்று முழுங்கும் போது, அவற்றின் தலை மற்றும் தாடைப் பகுதியில் மிகக் கடுமையான அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக, முதலையின் கண்களுக்கு அருகில் அமைந்துள்ள சுரப்பிகள் தானாகவே தூண்டப்பட்டு, அதிலிருந்து ஒரு வகையான திரவம் வெளியேறத் தொடங்குகிறது. இது பார்ப்பதற்கு நமக்குக் கண்ணீர் போலத் தோற்றமளிக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், முதலைகளின் கண்களில் இருந்து வரும் தண்ணீர் என்பது அதன் உணர்ச்சிகளோடு தொடர்புடையது அல்ல. அது வெறும் உடலின் தன்னிச்சையான அழுத்தத்தால் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மட்டுமே. இனி யாராவது ‘முதலைக் கண்ணீர்’ என்று கூறினால், அது ஏமாற்று வேலை அல்ல, அது ஒரு தாடை அழுத்த அறிவியல் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
