ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவிடம் மோசமாக தோல்வி அடைந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர், அமெரிக்க மண்ணிலிருந்தே இந்தியாவுக்கு எதிராக கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்தியாவுடனான போர் பாகிஸ்தானின் இருப்பையே அச்சுறுத்தும் நிலைக்கு சென்றால், முழு பிராந்தியமும் அணு ஆயுதப் போரில் மூழ்கிவிடும் என அவர் எச்சரித்தார். குறிப்பாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை குறிவைத்து, “இந்தியா ஒரு அணை கட்டும் வரை காத்திருப்போம்; கட்டினால், பத்து ஏவுகணைகளால் அதை அழிப்போம்” என முனீர் பேசியுள்ளார்.
ஒரு நாட்டின் ராணுவத் தலைவர், அமெரிக்க மண்ணிலிருந்து மூன்றாவது நாட்டுக்கு எதிராக அணு ஆயுத மிரட்டல் விடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் டம்பாவில் நடைபெற்ற இரவு விருந்தில், “நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு. மூழ்கி வருவதாக உணர்ந்தால், பாதி உலகத்தையும் எங்களுடன் எடுத்துச் செல்வோம்” என முனீர் வலியுறுத்தினார். ஆபரேஷன் சிந்தூருக்கு பின் அமெரிக்காவிற்கு தனது இரண்டாவது பயணமாக வந்த அவர், அங்கு உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை சந்தித்தார். வெளியேறும் அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தளபதி ஜெனரல் மைக்கேல் இ. குரில்லாவின் ஓய்வு விழாவிலும், அட்மிரல் பிராட் கூப்பர் பொறுப்பேற்ற கட்டளை மாற்ற விழாவிலும் கலந்து கொண்டார்.
கடந்த இரண்டு மாதங்களில் இது முனீரின் இரண்டாவது அமெரிக்க பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் தொடக்கத்தில் ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்ற அவர், அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் மதிய உணவில் கலந்து கொண்டார்.
பொதுவாக இத்தகைய மரியாதை ஒரு நாட்டுத் தலைவர் அல்லது அரசாங்கத் தலைவருக்கு மட்டுமே வழங்கப்படும் நிலையில், அந்தச் சந்திப்பு கவனம் ஈர்த்தது. அதன் பின்னர், எண்ணெய் ஒப்பந்தம் உட்பட பல்வேறு துறைகளில் அமெரிக்கா-பாகிஸ்தான் ஒத்துழைப்பை அதிகரிப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
