திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர், சமீபத்தில் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. “ஆட்சியில் அதிகாரப் பகிர்வு கேட்கும் நேரம் வந்துவிட்டது” என்று அவர் குறிப்பிட்டிருந்தது, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் காங்கிரஸ் அமைச்சர் பதவிகளைக் கேட்கப்போகிறதோ என்ற விவாதத்தை உண்டாக்கியது. இதனால் கூட்டணியில் ஒருவித சலசலப்பும், சங்கடமான சூழலும் நிலவி வந்தது.
இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிகாரப் பகிர்வு என்பது மாணிக்கம் தாகூரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே தவிர, அது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல; இதற்கும் காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார். இதன் மூலம் திமுக உடனான உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க காங்கிரஸ் தலைமை அவசர நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
