மத்தியப் பிரதேசம், ரைசன் மாவட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர படேலின் 2 வயது பேரன் கடத்தபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, வியாழக்கிழமை காலை 11 மணியளவில் திடீரென காணாமல் போனது. இது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததோடு, எம்எல்ஏயும் தனிப்பட்ட முறையில் தேடுதல் பணியில் ஈடுபட்டார்.

தகவல் கிடைத்தவுடன், போலீசார் 10 தனிப்படை குழுக்களாக பிரிந்து தேடுதல் பணியில் இறங்கினர். ஐஜி, டிஐஜி, எஸ்பி பங்கஜ் குமார் பாண்டே ஆகியோர் நேரடியாக கண்காணித்த இந்த நடவடிக்கையில், குற்றவாளிகள் பணத்துக்காக குழந்தையை கடத்தியதாக தெரியவந்தது. விசாரணையின் போது, ஒருவர் கைது செய்யப்பட்டு, திவீர விசாரணை செய்ததில்  மற்ற இருவரும் பிடிக்கப்பட்டனர்.

கடத்தலாளர்கள், குழந்தையை சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தின் தாமியா பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தனர். போலீசார் அங்கு சென்றடைந்து, குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். வெள்ளிக்கிழமை காலை, குழந்தையைத் திருப்பி குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு மக்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த நன்றியை தெரிவித்தனர்.

இந்த சம்பவம், பணம் என்ற பேராசையால், நெருங்கிய உறவினர்களால் கூட சிறுவர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையும், அதேசமயம் போலீசாரின் விரைவு நடவடிக்கையால் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது.