விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில், பாலமுருகன் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2025-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் பாலமுருகனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தனக்கு சாதகமாக தீர்ப்பு வராததால் கடும் ஆத்திரமடைந்த அவர், எதிர்பாராத விதமாக நீதிபதி சுதாகரை நோக்கி அரிவாளை வீசி தாக்குதலில் ஈடுபட்டார். நீதிமன்ற அறைக்குள்ளேயே நீதிபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட இந்தச் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பாலமுருகனை உடனடியாகப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
