பிரிட்டனின் கேம்பிரிட்ஜுக்கு அருகே உள்ள ஹூண்டிங்டன் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் மீது சரமாரியாகக் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதலில் பலத்த காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் பயணம் செய்த அப்பாவிப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தச் செயல், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமர் (UK PM) கெய்ர் ஸ்டார்மர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அவர், இத்தகைய கொடூரமான சம்பவம் நாட்டில் நடந்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின்போது நடந்த இத்தகைய எதிர்பாராத வன்முறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
