தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-வுக்குள் நிலவி வந்த புகைச்சல், தற்போது எரிமலையாக வெடித்துள்ளது. “அதிமுக உடையவில்லை, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்” என எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த சில மணி நேரங்களிலேயே, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு தனிப் பெரும்படையே உருவெடுத்துள்ளது. சுமார் 36 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சி.வி.சண்முகம் பின்னால் அணிவகுத்து நிற்பது, இபிஎஸ் தலைமையிலான அதிமுக-விற்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

​சட்டசபையில் ஈபிஎஸ் தரப்பு மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பு எனத் தனித்தனியாகச் செயல்பட்டபோதே சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது இந்த 36 எம்.எல்.ஏ-க்களும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவளிக்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “திமுக-வுடன் மறைமுகத் தொடர்பு வைப்பதாக” ஈபிஎஸ் மீது குற்றம் சாட்டியுள்ள சி.வி.சண்முகம் தரப்பு, கட்சியின் எதிர்காலத்தைக் கருதி விஜய்யை ஆதரிப்பதே சரியான முடிவு எனத் தெரிவித்துள்ளது. இந்த திடீர் அரசியல் திருப்பம், தமிழகத்தில் அதிமுக-வின் பிடியைத் தளர்த்தி, தவெக-வின் பலத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றன.