அதிமுக-வின் மூத்த தலைவரும், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், தற்பொழுது அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து, பின்னர் இபிஎஸ் அணியில் இணைந்த இவர், தேர்தலில் அதிமுக அடைந்த படுதோல்வி மற்றும் கட்சியில் நீடிக்கும் அடுத்தடுத்த குழப்பங்கள் காரணமாக அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் ஐக்கியமாகியுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகப் பதவி வகித்த வெல்லமண்டி நடராஜனின் இந்த அதிரடித் தாவல், திருச்சி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் அசுர வளர்ச்சியைப் பார்த்து அதிமுக-வின் அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிந்து வருவது இபிஎஸ் தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.
