அதிமுகவின் முக்கியத் தூணாக இருந்த செங்கோட்டையன் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, கொங்கு மண்டல அதிமுகவில் பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்கள் பலரும் இப்போது வரிசையாக அணிவகுத்து தவெக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் போக்குவரத்துப் பிரிவு சேலம் மாவட்டச் செயலாளராக இருந்த சென்ன கிருஷ்ணன், தற்போது செங்கோட்டையன் முன்னிலையிலேயே தவெக-வில் இணைந்து அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஈரோட்டில் செங்கோட்டையனை நேரில் சந்தித்து சென்ன கிருஷ்ணன் கைகோர்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. அதிமுகவின் பலமான மாவட்டமாக கருதப்படும் சேலத்தில் இருந்தே முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. செங்கோட்டையன் பின்னால் இன்னும் பல முக்கியப் புள்ளிகள் அணிமாறக் காத்திருப்பதாகக் கூறப்படுவதால், இந்த ‘ஈரோடு சந்திப்பு’ தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
