விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக மூத்த தலைவர் எல்.முருகன் கூறிய “அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தினால் என்ன தவறு?” என்ற கருத்தைத் திட்டவட்டமாக விமர்சித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: “அதிமுக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது என்பதற்கான உறுதியான சான்றாக இந்த கூற்று அமைகிறது. தமிழகம், அதிமுகவை பெரியார் வழிவந்த திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகவே நம்புகிறது.
ஆனால் இன்று, அந்த இயக்கத்தை கோல்வால்கர், சாவர்கர் போன்ற இந்துத்துவவாதிகள் வழிநடத்தலாம், அதை தவறென்று கூட கருத தேவையில்லை எனும் நிலைமை உருவாகியுள்ளது என்பது மிகுந்த கவலையளிக்கிறது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் நேரடியாக பதிலளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
