தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிலிருந்து தான் வெளியேறியதற்கான காரணத்தையும், திமுகவில் இணைந்ததற்கான பின்னணியையும் அதிரடியாக விளக்கினார். “அதிமுக இனி அழிவுப்பாதையை நோக்கித்தான் செல்லும், அங்கு சர்வாதிகாரமும் ஆணவமும் மட்டுமே மிஞ்சியுள்ளது” என எடப்பாடி பழனிசாமியை நேரடியாகச் சாடிய அவர், திராவிட இயக்கத்தின் தாய்க்கழகமான திமுகவில் இணைந்திருப்பது தனக்கு மிகுந்த மனமகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

​மேலும் பேசிய ஓ.பி.எஸ், “அண்ணா தொடங்கி கருணாநிதி கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் ஒரு தொண்டனாகப் பணியாற்றுவேன். முதல்வர் ஸ்டாலின் அரசியல் பண்பாட்டுடன் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்துகிறார்; அவரை இன்று நாடே உற்று நோக்குகிறது” எனப் புகழ்ந்து தள்ளினார். தென் மாவட்டத் தலைவர்களை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு ஒடுக்குவதாகவும், அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். “பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம்” என கருணாநிதியால் பாராட்டப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், வரும் தேர்தலில் வாய்ப்பளித்தால் போட்டியிடத் தயார் என்றும், ஸ்டாலினின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி அளித்தார்.