அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரைக் கவரும் வகையில் அதிரடி வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பட்டதாரிகளுக்கு மாதம் ₹2,000 மற்றும் பிளஸ் டூ முடித்தவர்களுக்கு ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட் வரையிலும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,400 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் நலன் கருதி, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ₹12,000-ஆக உயர்த்துவதாகவும், நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும் எடப்பாடியார் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக ₹1,000 ரொக்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த மெகா சலுகைகள் அனைத்தும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும் என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
