உத்தரப் பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில், திருமணமான இளம்பெண்ணை முன்னாள் காதலன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அந்தப் பகுதி மக்களை உலுக்கி உள்ளது.

ஜங்கில் ரசூல்பூர் கிராமத்தை சேர்ந்த தீபக் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி (20) ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரின் காதலுக்கும் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், உறவை ஷிவானி முறித்துக்கொண்டதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதத்தில் ஷிவானிக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு கணவர் வீட்டில் தங்கியிருந்த ஷிவானி, நேற்று முன்தினம் தன் தாயார் வீட்டிற்கு வந்திருந்தார். இரவு அவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, தீபக் அங்கு வந்து அவருடன் தகராறு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வாக்குவாதம் தீவிரமான நிலையில், தான் கொண்டு வந்த அரிவாளால் தீபக், ஷிவானியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ஷிவானி சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், ஷிவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் கொலைக்குப் பின்னர் தப்ப முயன்ற தீபக் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.