விளையாட்டு மைதானத்தில் பயிற்சியின் போது கூடைப்பந்து கம்பம் சாய்ந்து விழுந்ததால், தேசிய அளவிலான 16 வயது கூடைப்பந்து வீரர் உயிரிழந்த சம்பவம் ரோஹ்தக்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பகதூர்கரில் இதேபோன்ற விபத்து நிகழ்ந்த நிலையில், லகான் மஜ்ரா பகுதியில் ஏற்பட்ட இந்தச் சம்பவம், ஹரியானாவில் விளையாட்டு உள்கட்டமைப்பு பாதுகாப்பு மீதான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) காலை சுமார் 10 மணியளவில், மைதானத்தில் தனியாக பயிற்சி செய்து கொண்டிருந்த ஹார்திக், கூடை கம்பத்தில் தொங்க முயன்றுள்ளார். அந்த நேரத்தில் நிலைதடுமாறிய நிலையில் இருந்ததாகக் கூறப்படும் இரும்பு கூடைப்பந்து கம்பம் திடீரென முன்பக்கம் சாய்ந்து ஹார்திக்கின் மேல் சரிந்தது. கம்பம் நேரடியாக அவரது மார்பில் மோதி அவர் தரையில் சரிந்தார். இந்த முழு காட்சியும் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
हरियाणा के रोहतक में बास्केटबॉल पोल गिरने से एक खिलाड़ी की मौत हो गई है, जिसका CCTV फुटेज सामने आया है। #HaryanaNews #HaryanaPolice #Rohtak pic.twitter.com/dixJjCLPAl
— Prince Singh- RK (@princesinghrk) November 25, 2025
தாக்கத்தின் தீவிரத்தால், வளையமும் பின்புற பலகையும் கடுமையாக ஆடிப்போனது. ஹார்திக் கீழே விழுந்தவுடன் கட்டமைப்பின் எடையில் சிக்கிக் கொண்டார். அருகில் இருந்த வீரர்கள் உடனடியாக ஓடி வந்து கம்பத்தை தூக்கி அவரை மீட்டனர்.
பின்னர், கண்முன்னே நடந்த விபத்தில் திகைத்த வீரர்கள் அவரை உடனடியாக பிஜிஐ ரோஹ்தக் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், உயிர் காக்க முடியாமல் ஹார்திக் சில நேரத்தில் உயிரிழந்தார்.
காங்க்ராவில் வெள்ளி பதக்கம், ஹைதராபாத் மற்றும் புதுச்சேரியில் வெண்கலப் பதக்கங்கள் உட்பட பல தேசிய போட்டிகளில் விருதுகள் பெற்றிருந்த திறமையான வீரரான ஹார்திக், எதிர்காலம் உள்ள சிறந்த வீரர் என்று பயிற்சியாளர்கள் விவரித்தனர்.
இளம் வீரரின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும் கிராமத்தையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், விளையாட்டு மைதானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், உள்கட்டமைப்பு பராமரிப்பின் பற்றாக்குறை குறித்தும் விளையாட்டு உலகம் கடும் எதிர்வினை தெரிவித்து வருகிறது.
