தெற்கு ஸ்பெயினில் நேரிட்ட பயங்கர ரயில் விபத்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாகத் தடம் புரண்டு, எதிரே வந்த மற்றொரு ரயிலின் மீது பயங்கர மோதியது. இந்த விபத்தின் தாக்கத்தால் இரண்டாவது ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் சரிந்து விழுந்து உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரயிலின் இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமான பயணிகள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து எதனால் நிகழ்ந்தது என்பது குறித்து கண்டறிய ஸ்பெயின் நாட்டு அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.