மதுரை எம்பி மாணிக்கம் தாகூர், வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியை காங்கிரஸுக்கே ஒதுக்க வேண்டும் என மேலிடத்தில் கோரிக்கை வைக்கப்போவதாகத் தனது X (முன்பு ட்விட்டர்) தளத்தில் அதிரடியாகப் பதிவிட்டுள்ளார். கடந்த 2021 தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக சார்பில் கோ. தளபதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தற்போது அந்தத் தொகுதியைக் குறிவைக்கும் காங்கிரஸ், “அதிகாரத் திமிருடன் இருப்பவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்” என நேரடியாகத் திமுகவைத் தாக்கிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணிக் கட்சிகள் என்பதால் எப்போதும் அமைதியாகவே இருப்போம் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்றும், தங்களது தன்மானத்தைக் காக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தொகுதியைப் பங்கீடு செய்வதில் இப்போதே திமுக – காங்கிரஸ் இடையே மோதல் போக்குத் தெரிவதால், மதுரை அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
