
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. இதனால் தற்போது தமிழகத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன் தினம் அதிகபட்சமாக 20,701 மெகாவாட் அளவில் மின் தேவை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி அதிகபட்சமாக 20,583 மெகாவாட் அளவில் மின் தேவை அதிகரிக்க தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு சீரான வகையில் விநியோகிக்கப்படுகிறது. இதில் குறிப்பாக சூரிய மின்சக்தி மூலம் 4,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், காற்றாலைகளும் தற்போது மின்சார உற்பத்தியை தொடங்கியுள்ளது. அதோடு அனல் மின் நிலையங்களில் 3,600 மெகாவாட் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மத்திய தொகுப்பில் இருந்தும் 5,200 மெகா வாட்டுக்கும் மேல் பெறப்பட்டு மின்சாரம் பெறப்பட்டு சீரான முறையில் விநியோகிக்கப்படுகிறது. சீரான மின்சாரத்தை விநியோகிப்பதில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.