பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்பதால்  முன்னெச்சரிக்கையாக, பாகிஸ்தான் அரசு தன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 1000 மதராசா வகுப்புகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்பள்ளிகள், இஸ்லாமிய மதக்கல்வியை வழங்கும் இடங்களாக இருந்தாலும், சிலரால் தீவிரவாத முகாம்களாக பயன்படுத்தப்படும் எனக் கூறப்படும் நிலையில், இந்தியா இவற்றை தாக்கக்கூடும் என்ற பயத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உணவுப் பொருட்கள் மற்றும் தினசரி உணவு  தேவைகளை சேமித்து தயாராக இருக்க வேண்டும் எனவும், போர் சூழ்நிலை உருவாகும் சாத்தியக்கூறு இருப்பதால் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்  பொதுமக்கள் வீட்டில் தேவையான அளவுக்கு உணவுப் பொருட்கள், காய்கறிகள், நெய், பால் உள்ளிட்டவை சேமித்து வைக்கத் தொடங்கி விட்டனர்.

இந்த உத்தரவு மற்றும் எச்சரிக்கை பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா முன்னெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவதாகவும், பாதுகாப்பு வட்டாரங்கள் கருதுகின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதும், பொதுமக்களில் பதற்றம் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியா தனது திட்டங்களைத் திறந்தவெளியில் அறிவிக்காமல் இருந்தாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இருநாடுகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.