ORSL (ORSL, ORSL Plus, ORSL Fit) உள்ளிட்ட பெயர்களில் விற்பனையாகும் பானங்களுக்குத் தமிழக அரசு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. இந்தச் செய்தி கடைகளில் இப்பானங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தடைக்கான முக்கியக் காரணம், இந்தப் பானங்களைக் குடிப்பதால் நோயின் தீவிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்ததுதான். FSSAI-யின் அந்த எச்சரிக்கையைத் தற்போது தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்தத் தடையின்படி, இனி தமிழகத்தில் உலக பொது சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ORS (Oral Rehydration Salt) கரைசல்களை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ORSL பானங்களை மருந்துக்கடைகள் மற்றும் பிற கடைகளில் இருந்து பறிமுதல் செய்யுமாறு அதிகாரிகளுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, பொதுமக்கள் தவறான பொருட்களை வாங்கி உட்கொண்டு, உடல்நலக் குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.