தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக, காலநிலை மாற்றம் (Climate Change) குறித்த சிறப்பு வினாடி வினா போட்டி ஒன்றை அரசு ஏற்பாடு செய்துள்ளது. ‘சூழல் அறிவோம்’ என்ற தலைப்பில் நடக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்பதன் மூலம், மாணவர்கள் ரூபாய் 50,000 வரை பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். இது மாணவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 5 ஆம் தேதி (புதன்கிழமை) ஆகும். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் அதிகபட்சமாக 5 குழுக்கள் வரை பதிவு செய்யலாம். ஒரு குழுவில் 2 மாணவர்கள் இடம்பெற வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.tackon.org/soozhal என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
