ஆஸ்திரேலியாவின் பர்த் நகரைச் சேர்ந்த 45 வயதான நூலகர் கிரஹாம் பார்கர் என்பவர், தனது வாழ்நாளின் பாதியைக் கடந்து செய்த வினோதமான முயற்சி ஒன்றின் மூலம் ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது தொப்புள் பகுதியில் சேரும் பஞ்சு போன்ற அழுக்குகளை தொடர்ந்து சேகரித்து வந்துள்ள இவர், ஒட்டுமொத்தமாக 22.1 கிராம் எடையுள்ள தொப்புள் அழுக்குகளைச் சேகரித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த 1984-ஆம் ஆண்டு ஒரு நாள் மாலை பொழுதில் வீட்டில் சும்மா இருந்தபோது, தற்செயலாகத் தனது தொப்புளில் சேர்ந்திருந்த அழுக்கை கிரஹாம் கவனித்துள்ளார். அன்றிலிருந்து தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பாகத் தனது தொப்புளில் இருந்து அந்தப் அழுக்கு பஞ்சுகளை எடுத்து, வண்ணமயமான சிறிய பாட்டில்களில் சேமிப்பதை ஒரு வழக்கமாக மாற்றிக் கொண்டார். இவ்வாறு தொடர்ந்து சேகரித்ததில் தற்போது அவரிடம் பல்வேறு வண்ணங்களிலான தொப்புள் பஞ்சுகள் நிறைந்த மூன்று பெரிய பாட்டில்கள் உள்ளன. இவருடைய இந்த விசித்திரமான சேகரிப்பைப் பாராட்டி கின்னஸ் நிறுவனம் இவருக்கு உலக சாதனை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
View this post on Instagram
இந்த வினோதச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சிலர் இதனை மிகவும் அருவருப்பானது என்று கூறினாலும், பலரும் இவருடைய விடாமுயற்சியையும், தனித்துவமான ஆர்வத்தையும் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையே கிரஹாம் தான் சேகரித்த அந்த மூன்று பாட்டில் தொப்புள் பஞ்சுகளையும் ஒரு பிரபல அருங்காட்சியகத்திற்கு நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளார். துணிகளின் இழை, வியர்வை மற்றும் இறந்த தோல் செல்கள் மூலமே தொப்புளில் இந்த அழுக்குகள் சேர்வதாக மருத்துவர்கள் கூறும் நிலையில், கின்னஸ் சாதனை படைத்த பின்னரும் கிரஹாம் இந்த வினோதப் பழக்கத்தைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
