அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் இல்ல திருமணவிழா திருவேற்காட்டிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது பற்றி எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்கள்  சந்திப்பில் பேசியதாவது “இது தற்போது நடந்த வழக்கல்ல. முன்பே பொருளாதார குற்றப்பிரிவு விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இதற்கிடையில் ரூ.30 ஆயிரம் கோடி குறித்து செந்தில்பாலாஜி ஏதாவது பேசி விடுவாரோ எனும் அச்சத்தில் அனைவரும் சென்று பார்க்கின்றனர். செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால் தார்மீக பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும்” என பேசினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பிடிஆர் பழனிசாமி பேசியதாக வெளியாகிய ஆடியோவில் முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆட்சியமைத்த வெறும் ஒரே ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி அளவில் சம்பாதித்து விட்டதாக கூறப்பட்டது. தற்போது அதை குறிப்பிட்டு EPS  பேசியுள்ளதாக தெரிகிறது.