தீபாவளி பண்டிகையையொட்டி, ஒரு நிறுவனர் தனது ஊழியர்களுக்கு அளித்த பரிசு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. MITS குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான எம்.கே. பாட்டியா, தனது நிறுவனத்தில் சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு 51 சொகுசு ஸ்கார்பியோ SUV கார்கள் பரிசாக வழங்கியுள்ளார்.
தீபாவளி கொண்டாட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற சிறப்பு விழாவில், அவர் ஊழியர்களுக்கு கார் சாவிகளை வழங்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன்பும் பாட்டியா தனது ஊழியர்களுக்கு வாகனங்கள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. LinkedIn தளத்தில் வெளியிட்ட பதிவில் பாட்டியா கூறியதாவது:
“கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார்களை பரிசளித்து வருகிறேன். இந்த முறை அதையே தொடர்ந்து செய்துள்ளேன். அவர்களை நான் ஒருபோதும் ‘ஊழியர்கள்’ என்று நினைத்ததில்லை. அவர்கள் என் வாழ்க்கையின் ‘ராக்ஸ்டார்’ பிரபலங்கள்,” என்று தெரிவித்தார்.
51 cars (including SUVs, Scorpios) gifted to staff of a Pharma company in Chandigarh on the occasion of Diwali!
Why didn’t we get such employers?😭 pic.twitter.com/RgKI9fvj8K
— Keh Ke Peheno (@coolfunnytshirt) October 20, 2025
அவரது பதிவுடன் கார் சாவி ஒப்படைப்பு புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. சில கார்கள் ஏற்கனவே ஊழியர்களிடம் சென்றுவிட்டதாகவும், மேலும் சில வாகனங்கள் வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒருவர், “இந்த வீடியோவை என் மேலாளருக்குக் காட்டினேன்; அவர் இது AI மூலம் உருவாக்கப்பட்டதாகச் சொன்னார்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மற்றொருவர், “எங்கள் நிறுவனத்திலிருந்து எனக்கு கிடைத்த தீபாவளி பரிசு — ஒரு சிறிய கிண்ணம் உலர் பழங்களும் நான்கு விளக்குகளும் தான்” எனச் சாடினார். சிலர், “இந்த கார்கள் உண்மையில் பரிசா, அல்லது அதன் EMI ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுமா?” என்ற சந்தேகத்தையும் எழுப்பினர்.
இதற்கிடையில், பாட்டியாவின் தொழில் வாழ்க்கை பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2002 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய மருத்துவக் கடை பெரும் இழப்பைச் சந்தித்தது. ஆனால் அதிலிருந்து மீண்ட அவர், 2015 இல் MITS குழுமத்தை தொடங்கி இன்று வரை வளர்ச்சி பாதையில் உள்ளார். மேலும் தற்போது 12 நிறுவனங்களின் உரிமையாளராகவும், கனடா, லண்டன், துபாய் உள்ளிட்ட நாடுகளில் வணிக உரிமங்களைப் பெற்றவராகவும் உள்ளார்.
