துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் 163வது மாடிக்குத் தண்ணீர் கொண்டு செல்வது என்பது நவீன பொறியியலின் ஒரு மிகப்பெரிய சாதனையாகும். இவ்வளவு பிரம்மாண்டமான உயரத்திற்கு ஒரே ஒரு பம்ப் மூலம் நேரடியாகத் தண்ணீரைக் கொண்டு செல்வது சாத்தியமற்றது; ஏனெனில், கீழே இருந்து அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுத்தால் குழாய்கள் வெடித்துவிடும் அபாயம் உள்ளது.

இதற்காக அமெரிக்க நீர் தொழில்நுட்ப நிறுவனமான தாவரங்கள் வேரிலிருந்து இலைகளுக்குத் தண்ணீரை உறிஞ்சும் இயற்கை தத்துவத்தைப் பயன்படுத்தி ஒரு பிரத்யேக அமைப்பை உருவாக்கியுள்ளது. புர்ஜ் கலிஃபாவிற்கு தினமும் தேவைப்படும் சுமார் 2.5 லட்சம் கேலன் தண்ணீரானது, முதலில் கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலைகளில் இருந்து பெறப்பட்டு கட்டிடத்தின் அடித்தளத்தை வந்தடைகிறது.

இந்த தண்ணீரை மேலே கொண்டு செல்ல ‘மல்டி-ஸ்டேஜ் பூஸ்டர் பம்பிங் சிஸ்டம்’ பயன்படுத்தப்படுகிறது. இதற்காக புர்ஜ் கலிஃபாவில் சுமார் 20 முதல் 30 மாடிகளுக்கு இடையே மொத்தம் 7 பிரத்யேக மெக்கானிக்கல் மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடித்தளத்தில் உள்ள சக்திவாய்ந்த பம்புகள் தண்ணீரை முதல் நீர் நிலையத்திற்கு மேலேற்றுகின்றன.

மேலும் அங்குள்ள பெரிய தொட்டிகளில் இருந்து அடுத்த கட்ட பம்புகள் மூலம் தண்ணீர் மேலும் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அனுப்பப்படுகிறது. இப்படி பல நிலைகளாக 163வது மாடி வரை தண்ணீர் படிப்படியாகக் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் அங்கிருந்து புவியீர்ப்பு விசையின் உதவியோடு கீழ்நோக்கி அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்களுக்கு எவ்வித தடையுமின்றி சீரான அழுத்தத்தில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.