சீன நாட்டில் சோங்கிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள சிறப்பு படை போலீசார் போதைப்பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் அணில்களுக்கு சிறப்பு பயிற்சியை வழங்கி வருகின்றனர். இந்த பணிக்காக ஆறு சிவப்பு அணில்களின் குழுவை போதை பொருள் பிரிவில் அவர்கள் வைத்துள்ளனர். இதன் மூலம் கிடங்குகள் மற்றும் சேமிப்பு அலகுகளில் உள்ள மிகச் சிறிய அளவிலான போதைப்பொருட்களை கூட அணில்களை வைத்து கண்டுபிடிக்கின்றனர். இது தொடர்பாக சீன ஊடகம் ஒன்று அணில்கள் பெட்டிகளை சொரிவது, பொருட்களை தேடுவது போன்ற புகைப்படங்களை கூட சமீபத்தில் வெளியிட்டது.

அது மட்டுமல்லாமல் இந்த அணில்கள் மிக சுறுசுறுப்பாகவும், மோப்ப நாய்கள் செல்ல முடியாத இடங்களுக்கு கூட இவைகளால் எளிதாக நுழைய முடியும் என்பதால் எவ்வளவு சிறிய இடைவெளியானாலும் அதனுள் சென்று போதை பொருட்களை எளிதாக கண்டுபிடிப்பதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அணில்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட யின் ஜின் கூறியதாவது “இந்த அணில்கள் அனைத்தும் கடுமையான வாசனை உணர்வு உடையது. மேலும் அணில்களுக்காக உருவாக்கப்பட்ட பயிற்சி திட்டம் வருங்காலத்தில் மற்ற விலங்குகளுக்கும் பயிற்சி அளிக்க கூடிய வகையில் பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.