செயற்கை நுண்ணறிவின் அசுர வேக வளர்ச்சியால் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மெட்டா, அமேசான் மற்றும் ஆரக்கிள் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஐடி ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மெட்டா நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 10 சதவீதத்தினரை, அதாவது 8,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீடுகள் அதிகரித்து வருவதால், நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, வரும் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 47 சதவீத வேலைவாய்ப்புகள் ஏஐ தொழில்நுட்பத்தால் பறிபோகும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கணினி யுகத்திலிருந்து ஏஐ யுகத்திற்கு உலகம் மாறிக்கொண்டிருக்கும் வேளையில், பல பணிகளைச் செயற்கை நுண்ணறிவு தானியங்கி முறையில் செய்துவிடுவதால் மனித உழைப்பிற்கான தேவை குறைந்து வருகிறது. இத்தகைய சூழலில், ஐடி ஊழியர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
