தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையில் ஏற்பட்ட இடைவெளி முடிந்து, நவம்பர் 16-ஆம் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதன் மூலம் பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

பருவக்காற்று வீசத் தொடங்கியதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து மூன்று நிகழ்வுகளால் மழைப் பொழிவு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. நவம்பர் 15-ஆம் தேதி இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதனால், நவம்பர் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், 18, 19-ஆம் தேதிகளில் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பதிவாகும். அதனைத் தொடர்ந்து, 21 முதல் 25-ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, வட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையை அதிகரிக்கும்.

பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்படாத போதும், இந்த மழை மூலம் நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும், மூன்றாவது நிகழ்வாக புயல் உருவாகவும் சாதகமான சூழல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.