காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அமைப்புத் திறனை பாராட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அவர்கள் அரசியலமைப்பையோ, நாட்டின் சட்டங்களையோ மதிப்பதில்லை. மேலும், ஆர்எஸ்எஸ் பதிவு செய்யப்படாத அமைப்பாக இருந்தாலும், அது மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயல்படும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக வளர்ந்துள்ளது. அதன் அமைப்புத் திறனை நான் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, 1990-களில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் காலடியில், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருப்பது போன்ற கருப்பு-வெள்ளை புகைப்படத்தை திக்விஜய் சிங் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், “ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிமட்டத் தொண்டராக இருந்த ஒருவர், தலைவர்களின் காலடியில் அமர்ந்து பணியாற்றி, பின்னர் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் உயர்ந்தது வியப்பிற்குரியது. இதுதான் ஒரு அமைப்பின் வலிமை”
என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது அந்தப் பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை டேக் செய்து, காங்கிரஸ் கட்சியிலும் இதுபோன்ற அதிகாரப் பரவலாக்கலும், அடிமட்டக் கட்டமைப்பு வலுப்படுத்தலும் தேவை என்பதை மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டி திக்விஜய் சிங் தெரிவித்த கருத்துகளுக்கு காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில், அவர் கூறியது சரியானதே என்ற ஆதரவுக் குரலும் காங்கிரஸ் வட்டாரங்களில் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், திக்விஜய் சிங்கின் கருத்தை பாராட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். “ஒரு அமைப்பின் பலத்தை திக்விஜய் சிங் இப்போது புரிந்து கொண்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் இன்னும் அதை உணரவில்லை. காங்கிரஸ் தலித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தினமும் அவமதிக்கிறது. காங்கிரஸ் ஒரே குடும்பத்திற்குள் சுருங்கிவிட்டது. கட்சிக்குள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. ஒரு அமைப்பின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் ஒருவரை அங்கீகரித்து, வளர வாய்ப்பளிக்க வேண்டும். இந்த பண்பு காங்கிரஸில் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்