கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்துட்டுகுளம் அருகே திருமண விழாவுக்குச் சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாகப் பேருந்து பெட்ரோல் பங்க் இயந்திரங்கள் மீது மோதவில்லை, இல்லையெனில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டிருக்கும்.

கூத்துட்டுகுளம் – பிறவாம் பிரதான சாலையில் சுமார் 35 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் மழை பெய்துகொண்டிருந்ததால் சாலை முழுவதும் ஈரமாக இருந்தது. பேருந்துக்கு முன்னால் சென்ற ஸ்கூட்டர் ஓட்டுநர், எந்தவிதமான சிக்னலும் கொடுக்காமலும், பின்னால் வாகனங்கள் வருவதை கவனிக்காமலும் திடீரென தனது வாகனத்தை வலதுபுறமாகத் திருப்பினார்.

திடீரென நிகழ்ந்த இந்த மாற்றத்தால் பேருந்து ஓட்டுநருக்கு நிலைமையைச் சமாளிக்க விநாடி நேரம்கூட அவகாசம் கிடைக்கவில்லை. ஸ்கூட்டர் ஓட்டுநரின் உயிரைக் காப்பாற்ற முயன்ற ஓட்டுநர், அவசரமாக பிரேக் பிடித்து ஸ்டீயரிங்கை வலதுபுறமாகத் திருப்பினார். ஆனால், ஈரமான சாலையில் பேருந்தின் டயர் நழுவிச் சறுக்கியதால் ஓட்டுநரின் முழுமையான கட்டுப்பாடு நழுவியது. கவிழ்ந்தபடியே வழுக்கிச் சென்ற பேருந்து நேராக அருகிலுள்ள பெட்ரோல் பங்க்கிற்குள் புகுந்தது. அப்போது பேருந்தின் பின்பகுதி அந்த ஸ்கூட்டரின் மீது லேசாக உரசிச் சென்றது.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்தப் பதிவில், ஸ்கூட்டர் திடீரெனத் திரும்புவதும், அதனைத் தவிர்க்க ஓட்டுநர் போராடுவதும், இறுதியில் பேருந்து கவிழ்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

பெட்ரோல் பங்க்கில் இருந்த உறுதியான சிமெண்ட் தடுப்புச் சுவர் இல்லாதிருந்தால், பேருந்து நேரடியாக எரிபொருள் நிரப்பும் இயந்திரங்கள் மீதும், அங்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த கார் மீதும் மோதியிருக்கும். மேலும், அந்தப் பங்க்கில் நின்றிருந்த மற்றொரு ஸ்கூட்டர் ஓட்டுநரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 20 முதல் 35 பேர் வரை காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு, பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலம் கூத்துட்டுகுளத்தில் உள்ள மூன்று தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பெரும்பாலானோரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், 3 முதல் 4 பேருக்கு மட்டும் சற்று தீவிரமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியான பிறகு சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. ஸ்கூட்டரை காப்பாற்ற முயன்று தனது உயிரையும் பயணிகளின் பாதுகாப்பையும் பணயம் வைத்த பேருந்து ஓட்டுநரின் துணிச்சலை ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கவனக்குறைவாக வண்டியைத் திருப்பிய ஸ்கூட்டர் ஓட்டுநரின் அலட்சியமே இவ்வளவு பெரிய விபத்திற்குக் காரணம் என்று பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.